ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எதிர்த்தரப்பினரைக் காணவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சத்தியமூர்த்தி பவனில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களது தோழமைக் கட்சியினர் அங்கு பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்கள். ஆனால் எங்கள் எதிர்த்தரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. எனக்கு அது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
நாங்களும் ஈரோட்டில் தேடித் தேடி பார்க்கிறோம். சிலர் மிக அடக்கமாக பேசுகிறார்கள். அடக்கமே தெரியாதவர்கள் மிக அடக்கமாக பேசுகிறார்கள். அது என்ன காரணம் என்றும் எனக்கு தெரியவில்லை. தேர்தல் அவர்களுக்கு மிக நல்ல படிப்பினையைத் தந்துள்ளது.
எங்களது வேட்பாளர் இளங்கோவன் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். காஷ்மீரில் நடைபெறும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு விழாவில் நான் பங்கேற்கிறேன். மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு நாளில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெறும்” எனக் கூறினார்