சென்னை தினம் கொண்டாடும் வகையில் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், கதை சொல்லுதல், கட்டுரை , குறு நாடகங்கள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு பரிசுகளை கொடுத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் பணிகள் 80% நிறைவுற்றுவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "நகர்ப்புறங்களில் ஓரிரு இடங்களில் 40% ஓரிரு இடங்களில் 50% ஓரிரு இடங்களில் 70% பணிகள் நிறைவேறி விட்டன. வெளிப்புற சூழ்நிலைகளால் (குறுக்கே மரம் இருத்தல்,மின்கம்பங்கள் இருத்தல்)அப்பணிகள் தாமதமாகிறது. பணிகளுக்காக ஒப்பந்தம் செய்தவர்கள் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தாமதமாகிறது என்று கூறினார். எனவே அதிகமான ஆட்களை அழைத்து வந்து வேலையை முடிக்கும் படி சொல்லி இருக்கின்றோம். செப்டம்பர் மாத இறுதிக்குள் 80% வேலைகள் முடிந்துவிடும் என நினைக்கின்றோம் அதே போல் வேலை முடிந்த இடங்களிலும் நிச்சயம் தண்ணீர் தேங்க வாய்ப்புகள் இல்லை. கடந்த வருடங்களை போல் இல்லாது ஓரிரு இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் அடுத்த சில மணி நேரங்களில் அதை நீக்குவதற்கான முன்னேற்பாடுகள் இருக்கின்றன. அடுத்த வருடத்தில் முழுவதுமாக சென்னை சரியாக இருக்கும்" எனக் கூறினார்.