இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தேசிய மாநாட்டில் 125 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் எஸ்.சுதாகர் ரெட்டி மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
மேலும், இந்த மாநாட்டில் 125 பேர் கொண்ட தேசிய குழுவில் மூத்த தலைவர்களான சி.திவாகரன், சத்யன் மோகேரி, சி.என்.சந்திரன் மற்றும் கமலா சதானந்தன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்கள் முந்தைய தேசிய குழுவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் கன்னையா குமார் தேசிய குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய சி.திவாகரன், ‘எங்களுக்கு காட்ஃபாதர்கள் என்று யாரும் இல்லை. யாருடைய உதவியோடும் தேசிய குழுவில் இடம்பெற வேண்டிய அவசியமும் இல்லை’ என தெரிவித்துள்ளார். இதற்கு கேரள மாநில சி.பி.ஐ. மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன், ‘உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி விதிகளின் படி புதிதாக 20 முகங்களை அறிமுக செய்யவேண்டும் என்பது பின்பற்றப்பட்டுள்ளது’ என விளக்கமளித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்ந்து உயர்பதவியில் நீடிப்பது முடியாத காரியம். அதேசமயம், சி.பி.ஐ. கட்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு நபர் தேசிய செயலாளர் பதவியைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.