கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை நாளை தொடங்க இருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, திமுக தலைவர் கலைஞர், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், உள்ளிட்ட அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதேபோல் நடிகர் ரஜினியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.
இதனைதொடர்ந்து இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சீமானுடனான இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்த ஆட்சி சரியில்லை என்று கூறும் நான் அவர்களை எப்படி சந்திப்பேன். நான் அதிமுகவில் யாரையும் சந்திக்கப் போவதில்லை என கூறியிருந்தார்.
|
இந்நிலையில், இதுகுறித்து இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை. எத்தனை கமல்ஹாசன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்படி வைத்தியம் செய்து வருகிறார். கட்சி நடத்துபவர்களிடம் ஆதரவு கோரும் கமலின் முடிவு கேலிக்கூத்தாக முடியுமே தவிர விஸ்வரூபமாக மாறாது.
வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால் கட்சி தொடங்கும் கமலை வாழ்த்தியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.