



மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள் விழாவை, அக்கட்சியினர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக சேலத்தில் கொண்டாடினர். ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், வேட்டி, சேலை என நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் வேலையிழந்து, வருவாயின்றி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தமிழக அரசு, ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியதோடு 2 கோடி குடும்பங்களும் திருப்திப்பட்டுக் கொண்டதாகக் கருதிவிட்டது.
அதேநேரத்தில், தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என நிவாரண உதவிகள் வழங்குவதில் சுழன்றடித்து களமாடி வருகின்றனர். இதற்காகவே அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் என்ற தனி செயலியையும் தொடங்கி இருந்தார். நிவாரணம் எதிர்பார்க்கும் அடித்தட்டு மக்களிடம், 'ஒன்றிணைவோம் வா' திட்டம் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.
இந்நிலையில், மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 97ஆவது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியன்று (புதன் கிழமை), ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாட அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது.
இதற்காகவே காத்திருந்ததுபோல் அக்கட்சி நிர்வாகிகள், நிவாரணப் பொருள்களை கொள்முதல் செய்து தயார் நிலையில் இருந்தனர். புதனன்று, மாவட்டச் செயலாளர், பொறுப்பாளர்கள் முதல் ஒன்றியச் செயலாளர்கள் வரை அவரவர்க்கு உட்பட்ட பகுதிகளில் ஏழைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை மத்திய மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலக வாயிலில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் தலைமையில் நிர்வாகிகள், கோரிமேட்டில் உள்ள காருண்யா ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவர்களுக்கு உணவு வழங்கினர். மத்திய மாவட்டம் சார்பில் அடுத்தடுத்த நாள்களிலும் நிவாரண உதவிகள் வழங்கும் விழாக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சேலம் கோட்டையில் 1,000 பேருக்கும், ஜான்சன் பேட்டை மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தலா 500 பேருக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் நிர்வாகிகள், தாரமங்கலத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை விரிவாகவே செய்திருந்தார்.
ஏ.என்.மங்கலத்தில், ஆயிரம் பேருக்கு வெஜிடேபிள் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் எஸ்.ஆர்.சிவலிங்கம். அத்துடன் நில்லாமல், 1,000 பேருக்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், முட்டைக்கோஸ், கத்தரிக்காய் என 4 கிலோ காய்கறிகள் கொண்ட தொகுப்பு, வாழை, ஆரஞ்சு, சப்போட்டா, திராட்சை பழங்கள் ஆகியவை தலா அரை கிலோ வீதம் இரண்டு கிலோ பழக்கூடை ஆகியவற்றை நிறைவாக வழங்கினர். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், ஏ.என். மங்கலத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு கவுன்சிலர் பாரதி ஜெயக்குமார் ஆகியோர் அரிசி, காய்கறி, பழங்கள், உணவுடன் விருந்தளித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அனுப்பூரில், ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ரேஷன் கடையில் குவிந்திருந்த மக்களும் ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை பெற்றுச்சென்றனர். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அனுப்பூர் மணி, அக்காட்சிகளை வேடிக்கை பார்த்தபடியே காரில் சென்றார்.

இதையடுத்து, உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி, மேட்டுப்பட்டி தாதனூர், குள்ளம்பட்டி ஆகிய இடங்களில் தலா 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சில இடங்களில் ஒருவேளை உணவும், சில பகுதிகளில் வேட்டி, சேலையும், சில கிராமங்களில் 5 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் தலா ஒரு கிலோ கொண்ட நிவாரணப் பொருளுதவிகளும் அயோத்தியாப்பட்டண ஒன்றிய தி.மு.க.வினர் வழங்கினர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவிகள் வழங்கியதிலேயே கவனம் ஈர்த்திருந்தனர் தி.மு.க.வினர். இந்நிலையில், கலைஞர் பிறந்த நாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக முன்னெடுத்திருப்பது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் வயிற்றில் புளியையும் கரைத்துள்ளது.