டெல்லியில் பத்திரிகையாளர் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செய்தி, பத்திரிகை உலகில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதனையறிந்த தமிழக அரசியல்வாதிகள் பலரும், தங்களது நட்பு வட்டத்திலுள்ள பத்திரிகையாளர்களையும் ஊடகவியாளர்களையும் தொடர்புகொண்டு, ’’உங்களின் ஆரோக்கியம் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியம். தற்போதைய அபாயகரமான சூழலில் வீட்டிற்குள்ளே இருங்கள். வெளியே செல்ல வேண்டிய சூழலில், பாதுகாப்பு கவசங்களுடனும் செல்லுங்கள், செய்தி எடுக்கும் போதும் புகைப்படம் எடுக்கும்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
உங்களின் அந்தச் செயல்பாடுகள்தான் அதனைக் கவனிக்கிற மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும். அதிகபட்சம் வீடுகளிலிருந்தே பணிபுரியும் தன்மையை உருவாக்கிக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுதான் நாட்டின் ஆரோக்கியம் ‘’ என்கிற ரீதியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.