ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்க நினைப்பது ஏற்புடையது அல்ல என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரைச் சந்தித்த பிறகு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''தமிழக ஆளுநரை நான் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும், முக்கியமாக திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகபிரம்ம சபையினுடைய விழாவில் ஒருநாள் கலந்து கொள்வதற்காக அவரிடம் பேசினேன். சந்திப்பு நடந்ததுடைய நோக்கம் இதுதான். இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது. இருந்தாலும் ஆளுநரிடம் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் குறித்து என்னுடைய கருத்துக்களைப் பொதுவாக தெரிவித்தேன்.
சென்ற வாரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒன்பதாம் ஆண்டினுடைய தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் நடந்தது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை இயக்கத்திற்குக் கொடுத்திருக்கிறோம். தை பிறந்தவுடன் அந்த செயல் திட்டம் இயக்கத்தின் சார்பில் மாவட்டம், வட்டாரம், நகரம், கிராம ரீதியில் தொடங்கி செயல்பட இருக்கிறது. அதனடிப்படையில் கூட்டணிக்கு த.மா.கா வலுசேர்க்கும். நிற்கும் இடங்களில் வெற்றியைப் பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டியது ஆளுநரின் கடமை. அதற்கேற்றவாறு அவர் செயல்படுகிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. அதை பொதுமக்கள் விரும்பவில்லை என்பது தான் என்னுடைய கருத்து'' என்றார்.