8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது. பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''இன்று கொண்டு வந்திருக்கக் கூடிய சட்டமானது பொதுவாக இன்றைக்கு இருக்கக் கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் வருகின்ற பொழுது மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய நிறுவனங்கள் இங்கே நம்முடைய வேலை நேரங்களிலே குறிப்பிட்ட ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மை மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
அப்படி வரக்கூடிய நிறுவனங்கள் என்னென்ன நிறுவனங்கள் என்று கேட்டால் எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானதல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருத்தமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மின்னணு துறையில் இருக்கக்கூடிய, அதேபோல் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் இப்படிப்பட்ட துறைகளில் வரக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கக் கூடிய சூழலுக்கு ஏற்ற வகையில் அங்கு வேலை பார்ப்பவர்கள் அவர்களாகவே விரும்பினால் இதை ஒரு ஆப்ஷனாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் வாரத்தில் இருக்கக் கூடிய ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் மாறாது. அவர்கள் நான்கு நாட்களுக்குள் பணி செய்துவிட்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணிகளை அவர்கள் பார்க்கலாம்.
இன்று ஏற்பட்டிருக்கக் கூடிய மாறுபட்ட வொர்க்கிங் கண்டிஷன் என்ன சொல்கிறது என்று கேட்டால் இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது. எந்த தொழில்துறைக்கு இது பொருத்தமானது என்பது தொடர்பான கொள்கைகள் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டு அதன் வாயிலாக வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அங்கு பணியாற்றக் கூடியவர்கள் யார் விரும்புகிறார்களோ அவர்களாக தன்னார்வமாக தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை இது மாற்றுவதாக அமையாது. இதைச் செய்யும்போதும் கூட எந்த இடத்தில் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்; அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள வொர்க்கிங் கண்டிஷன் என்ன... உதாரணத்திற்கு ஒரு இன்ஜினியரிங் கம்பெனி தளத்திற்கும் ஒரு எலக்ட்ரானிக் மேனுஃபாக்சரிங் கம்பெனி இருக்கக் கூடிய தளத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. அந்த இடத்தில் வேலை செய்யக் கூடியவர்களின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது; அங்கு வேலை பார்க்கக் கூடியவர்களுக்கும் பணி தளத்திற்கும் இடையே உள்ள தூரம் என்ன; அங்கே வரக்கூடிய வசதிகள் அவர்களுக்கு இருக்கிறதா; தங்குமிடம் இருக்கிறதா; 12 மணி நேரம் அவர் வேலை பார்க்கிறார் என்று சொன்னால் அதற்கான வசதிகள் அந்த சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு செய்யப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் முழுமையாக ஏற்றுக் கொண்டுதான் இதற்கான அனுமதிகள் வழங்கப்படுகிறது. அல்லாமல், அவர்களுக்கு உடனடியாக ஏதோ இதில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை இல்லை'' என்றார்.