ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என ஆளுநர் ரவி பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும் போது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. முதலாவது மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது மசோதாவை நிறுத்தி வைப்பது. மூன்றாவது வாய்ப்பு அந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது. நிறுத்தி வைப்பது என்றாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நிராகரிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு பதிலாகவே நிறுத்திவைப்பு என்னும் வார்த்தையை பயன்படுத்துகிறோம் என ஆளுநர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 20க்கும் மேற்பட்டவை ஆளுநரிடம் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.