விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித் திட்டத்திற்கான 'தாலிக்குத் தங்கம்' வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உட்பட ஏராளமான அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
விழாமுடிந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குக்கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர். தற்போது முதலமைச்சராக இருந்தும்கூட பல்வேறு பணிகளுக்கிடையே மாதம் ஒருமுறை தனது கிராமத்திற்குச் சென்று விவசாயம் பார்த்து வருகிறார்.
உண்மையான விவசாயி அவர். அதனால்தான் அவர் எளிமையாக வாழ்ந்துவருகிறார். ஆனால், மு.க.ஸ்டாலின் அப்படி கிடையாது. அவருக்கு விவசாயம், விவசாயிகள் படும் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. அவர் பிறந்து வளர்ந்த விதம் வேறு. பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் மட்டும் விவசாயி ஆகிவிடமுடியாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும்.
மு.க.ஸ்டாலின் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை. மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும் தமிழக துணை முதலமைச்சராகவும் இருந்தபோது செய்ய முடியாததை தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு செய்வேன் என்று கூறுகிறார். இது எப்படிச் சாத்தியமாகும்.
அதிமுக கொடி கட்டிக் கொண்டு சசிகலா தமிழகத்திற்குள் காரில் வந்த சம்பவம் தொடர்பாக சட்டம் தன் கடமையைச் செய்யும். சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன், முதலில் நீங்கள் உங்களை தினகரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். கட்சியையும் ஆட்சியையும் டிடிவி தினகரனிடம் விட்டுவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றார். ஆனால், ஒரே மாதத்தில் டிடிவி தினகரன் அனைத்தையும் உடைத்துவிட்டார்.
முதலில் அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்கச் சொல்லுங்கள். அதிமுக சாதாரண இயக்கமல்ல ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கம். அந்த தொண்டர்களின் உழைப்பால், அவர்கள் ரத்தத்தில் உருவானது இந்த இயக்கம். இதில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு இடமில்லை. எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் சசிகலா குடும்பத்திற்கு அதிமுக மீண்டும் ஒருமுறை அடிமையாக இருக்காது” என அவர் பேசினார்.