தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மெரினா கடலில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினா கடலின் நடுவே 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இதை திமுகவினர் வரவேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டுமென சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம் எனக் கேள்வியெழுப்பியுள்ள விஜயகாந்த், நினைவுச் சின்னம் அவசியமென்றால் திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான பணத்தில் அமைத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம்? நினைவுச்சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைத்து கொள்ளவும். pic.twitter.com/wL27X8UGpw
— Vijayakant (@iVijayakant) July 24, 2022