ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையம் வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''ஒரு ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி பாஜக கட்சி. அப்படி இருக்கும் பொழுது பாஜகவின் தொண்டர்களோ, பொதுமக்களோ இப்படி அமைச்சரின் மீது செய்திருந்தால் நிச்சயமாக நமது தொண்டர்கள், தலைவர்களிடம் பேசி அதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகின்றோம். அதே நேரத்தில் ஒரு அமைச்சர், பொதுமக்கள், தொண்டர்கள் இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்கிறார் என்றால் அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ''பாஜகவின் சித்தாந்தம் என்பது எந்த விதத்திலும் கலவரத்தை விரும்பக்கூடியது அல்ல. அதே நேரத்தில் புரோட்டோகாலில் இருக்கக்கூடிய மாவட்டத்தின் அமைச்சர் அங்கிருந்த பொதுமக்கள், தொண்டர்களிடம் பேசிய வார்த்தையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக 'தொண்டர்கள் செய்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட தலைவர் நான் தாய் கழகத்திற்கு செல்கிறேன் என சொல்லி இருப்பது அவருடைய உரிமை. நீங்கள் இருங்கள் என்று நான் சொல்லப்போவது கிடையாது. அது அவரவர்களுடைய முடிவு. அடுத்த தலைவர் தயாராக இருப்பார். அவர் தோள் மீது சுமையை ஏற்றிக்கொண்டு கட்சியை வளர்க்க பாடுபடுவார். இது நேற்று நடந்திருக்கக் கூடாது. ஒரு அரை மணி நேரம் முன்னாடி நான் வந்திருந்தால் கூட இதை கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். நான் வந்த பொழுது சண்டை எல்லாம் முடிந்து ரொம்ப உஷ்ணமாக சூடாக இருந்தார்கள். நான் அங்கே வருவதை காவல்துறைக்கும் சொல்லவில்லை. காரணம் திருச்சியிலிருந்து சிவகங்கைக்கு வரவேண்டிய புரோகிராம் இருந்தது. அதன் பிறகு அங்கிருந்து மாற்றி மதுரைக்கு போக வேண்டிய நிலைமை இருந்தது. அதனால் காவல்துறைக்கும் கடைசி நேரத்தில் சொல்ல வேண்டியதாயிற்று. நேற்று நடைபெற்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அது கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரான நிகழ்வு'' என்றார்.