காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''தேசத்தந்தை மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை இப்படித்தான் துவங்கினார். அது சாதாரணமான விஷயமாக அன்று இருந்த ஆங்கிலேயர்களுக்கு தெரிந்தது. ஆனால் அந்த யாத்திரையினுடைய ஊக்கம் என்பது மக்களுடைய உணர்வுகளை ஆளுகிறபவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு சிறந்த கொள்கையை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் ஆரம்பித்தார்கள்.
அந்த நடை பயணத்தினுடைய முடிவு சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தகர்த்து சுக்கு நூறானதை நாம் பார்த்தோம். அதேதான் இன்றைக்கும் நடைபெற இருக்கிறது. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். அற்புதமான இளைஞர் அவர். மிகுந்த லட்சிய உணர்வு உடையவர், புரட்சிகரமான சிந்தனைகள் உடையவர், எளிமையானவர். அவர் நினைத்திருந்தால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பிரதம மந்திரி ஆகியிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பு வந்த போது அவர் மறுத்தார். ஒன்றைப் பெறுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறதோ அதைவிட ஒன்றை விட்டுக் கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்கிறோம். இந்த நடை பயணத்தின் நோக்கம் இந்திய மக்களுக்கு மீண்டும் சில உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்பதே'' என்றார்.