
தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை 1000 யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இதனையொட்டி விசைத்தறியாளர்கள் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். இதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார்.
விசைத்தறி நெசவுத்தறி சங்கங்களின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலமைச்சர் பேசும்போது, “தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி வழங்க கட்சி முடிவெடுத்தது. கலைஞர் கைத்தறி துணிகளை வாங்கித்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். ஒரே நேரத்தில் இரு நன்மைகள் நடந்தது. பாதிக்கப்பட்ட நெசவளர்களுக்கும் துணி விற்பனையானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் துணி கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் நெசவாளர்களுக்கு நன்மைகள் செய்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. உழவர்களுக்கு இருப்பதுபோல் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று 2006ல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
நெசவாளர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். விசைத்தறிகளுக்கு அரசு உதவிகள்; நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; அரசின் அனைத்து துறைகளுக்கு தேவையான துணிகளை விசைத்தறிகளின் மூலம் பெற வேண்டும் என்ற ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். நெசவாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் படிப்படியாக அதே நேரம் உறுதியாக நிறைவேற்றப்படும். நீங்கள் வைக்காத கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றப் போகிறேன். ஜவுளித் துறைக்கு ஆணி வேறாக விளங்கக் கூடியது நெசவு. ஜவுளித்துறையில் இந்தியாவின் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று மாநிலமெங்கும் பல ஜவுளிப் பூங்காக்களை அமைக்க திமுக அரசு முயற்சிக்கிறது. மேற்கு மண்டலத்தில் அடுத்து ஜவுளிப் பூங்கா அமைக்க இருக்கிறது.” எனக் கூறினார்.