திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக ரூ.3 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தேர்தலின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறை சார்பாக அறிவித்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம்மிடம் வாங்கிய ஜி.எஸ்.டி வரிப் பணத்தை கேட்டு பெறும் நிலைக்கு தமிழக அரசை மத்திய அரசு தள்ளி வருகிறது.
அதுபோல் நீட் தேர்வை கொண்டு தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவ கனவை அழித்த பா.ஜ.க. அரசு, இப்போது தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மாணவ-மாணவியர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தார்கள். க்யூட் தேர்வை கொண்டு வந்தததன் மூலம் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வட இந்தியாவைச் சேர்ந்த நாகலாந்து, மணிப்பூர், ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. நீதிமன்றங்கள் இருப்பதால் தான் இந்தியாவில் இன்னும் நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் கல்வியை பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளி மாணவர்களின் நலன் காப்பதோடு அவர்கள் விரும்பும் பாடங்களும் கிடைத்து நல்லமுறையில் படித்து வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அடுத்து அடுத்து விசாரிக்கும் என கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ..க அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால் இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் லாபத்திற்காக, சுயநலத்திற்காக அமலாக்கத்துறையை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு ஆணவமாகவும், அதிகாரமாகவும் செயல்பட்டால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது.
அ.தி.மு.க. அரசு தமிழகத்தை 10 வருடம் ஆண்டபோது 5 லட்சம் கோடி அளவிற்கு கடன் சுமையை ஏற்றி விட்டார்கள். தமிழகத்தில் இப்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் கூப்பாடு போடுகின்றனர். உதய்மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் இன்று மத்திய அரசு சொல்லும் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு குறித்து மின்துறை அமைச்சர் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் கருத்துக்களை சொல்லலாம் என கூறியுள்ளார். லட்சக்கணக்கான பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பத்து வருடங்களாக தமிழகத்தில் தறிகெட்டு ஓடிய அதிமுக அரசு பேருந்து பிரேக் இல்லாத வண்டியாக செயல்பட்டு வந்தது. தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். விரைவில் தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு உயர்த்துவார்” என்று கூறினார்.