அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் இன்று (17.01.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் எஸ். ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர் ஆகியோர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். தொடர்பான காணொளியை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தி கிரேட் எம்.ஜி.ஆர். எனத் தொடங்கும், சுமார் 47 விநாடிகள் கொண்ட அந்த காணொளியைப் பிரதமர் மோடி அவரது குரலில் பதிவு செய்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், “எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். என மக்களால் அழைக்கப்படும் எம்.ஜி. இராமச்சந்திரன் இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 17.1.1917 அன்று கோபாலன் மேனன் சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார். இவர் தமது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத்திகழ்ந்தார். அதன் பின்னர் 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதோடு 1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். 1988ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.