கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது. புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை துவங்கினார். அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் உடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 8 மாதமாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இந்த எட்டுமாத காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுதல் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது'' என்றார்.
இந்நிலையில் ஆளுநர் உரை குறித்து தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாவது, ''மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆளுநர் உரை உள்ளதா என ஆராய்ந்தால் பூஜ்ஜியம்தான். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு 6,038 கோடி ரூபாய் இழப்பீடு அறிவிப்பாகவே உள்ளது. விவசாயிகளை சென்றடையவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.