சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆளுநரை வைத்து எங்களை அச்சுறுத்த நினைத்தால் அஞ்சமாட்டோம். ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் திராவிடம் என்பதால், அதனைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க ஆளுநர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. திராவிடம் என்றால் காலாவதியான கொள்கை என்று ஆளுநர் சொல்லியுள்ளார். ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம்.
ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்திற்கு மட்டும்தான் உண்டு. அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் அதைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். ஆளுநர் பயப்படத் தேவையில்லை. திராவிடம் என்பது எதையும் இடிக்காது. உருவாக்கும். திராவிட மாடல் யாரையும் பிரிக்காது ஒன்று சேர்க்கும், யாரையும் தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும்” எனக் கூறினார்.