இந்தக் கரோனா காலத்திலும் உரிமைகளை, சலுகைகளைப் பெற போராடித்தான் தீர வேண்டியுள்ளது எனக் குமுறுகிறார்கள் அரசு ஊழியர்களான வருவாய்த் துறை பணியாளர்கள்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணியின்போது உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அதில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு இறந்து போன வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இதுவரை இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளான 260 க்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உயர் தரமான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
மேலும் அரசாணையின்படி அவர்களுக்கு கருணைத் தொகை ரூபாய் இரண்டு லட்சம் வழங்க வேண்டும் என இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு 5 ஆம் தேதியும், 6 ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும், அதாவது தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்துவதாகவும், 5ஆம் தேதி ஒவ்வொடு மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் தனிமனித இடைவெளியுடன் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்கள்.
"சொன்னதை செய்யுங்க ஆட்சியாளர்களே..." எனக் கரோனா காலத்தில் அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.