“சினிமாவிலும் அரசியலிலும் ரொம்பவே பிசியாகிவிட்டார் புரட்சித் திலகம்..” என்று குஷியாகச் சொல்கிறார்கள் ச.ம.க.வினர்.
வேளச்சேரி துப்பாக்கிச்சூடு, பாம்பன் என சரத்குமார் நடிப்பில், திரைப்படங்கள் உருவாகிவரும் நிலையில், அரசியல் களத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அடுத்த பொதுத்தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் ச.ம.க.வுக்கு சரியாக இருக்கும் என்ற திட்டமிடலோடு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். முதற்கட்டமாக, அரசாங்கத்தையும் ஆளும் கட்சியையும் எதிர்த்து, எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனை சந்தித்துப் பேசி, தோழர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறார்.
அடுத்தடுத்த சந்திப்புக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மற்றும் வி.சி.க. தலைவர்களுடனானது என்கிறார்கள் ச.ம.க.வினர். பா.ஜ.க., அதிமுக, திமுக. போன்ற கட்சிகளுடன் ச.ம.க. தேர்தல் உறவு வைத்துக்கொள்வதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்றெல்லாம் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.
மக்கள் ஆதரவு போராட்டங்களை தங்களுக்கு இணக்கமான கட்சிகளுடன் இணைந்து நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்கின்றனர்.
“சாதி கண்ணோட்டத்துடன் தன்னை யாரும் பார்க்கக் கூடாது என்றுதான் கட்சியின் பெயரில் சமத்துவத்தைக் கொண்டுவந்தார் சரத்குமார். ஆனாலும், அவர் மீது சாதி முத்திரை விழுந்துவிட்டது. சாதி ஆதரவு வலுவாக இருந்தாலும், கட்சியின் முன்னேற்றத்துக்கு இதுவே ஒரு தடையாக இருந்தது. அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானவர் சரத்குமார் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். எங்கள் நாட்டாமைக்கு அரசியலில் நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.” என்று உற்சாகமாக சொல்கிறார்கள் சமத்துவ மக்கள் கட்சியினர்.
“எந்த ஒரு செயலிலும் எதெதனை ஆராய்ந்து இறங்க வேண்டும் என்பதை குறள் வழியாக அருமையாகச் சொல்கிறார் வள்ளுவர் -
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
நடிகர் மட்டுமல்ல, படித்த அறிஞரும் ஆவார் சரத்குமார். பல நேரங்களில், இந்தக் குறளை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் ச.ம.க.வுக்கென்று ஒரு இடம் உண்டு. நல்லவர்களை மக்கள் ஆதரிப்பார்கள்.” என்று நம்பிக்கையோடு பேசினார் அந்த ச.ம.க. நிர்வாகி.