Skip to main content

கவர்னர் - முதல்வர் சந்திப்பு... பின்னணியை அறிந்த அமைச்சர்கள் நிம்மதி...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

 

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று கவர்னரை அவசரமாக சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும் சென்றிருந்தனர். 


 

EPS



கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க செல்கிறார் என்றதும், அமைச்சர்கள் சிலருக்கு கிலியை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த எம்எல்ஏக்கள் சிலர் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அமைச்சரவை மாற்றம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

இந்த சந்திப்பு குறித்து விசாரித்தபோது, அயோத்தி பிரச்சனை தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரலாம். அந்த சமயங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த வகையிலும் சீர்குலைந்துவிடாமல் இருப்பதற்கான முன் முயற்சிகளை எடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், இந்த சந்திப்பில் இதுதான் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது ராஜ்பவன் வட்டாரம். 


 

இந்த நிலையில் டிஜிபி திரிபாதியிடம் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு அவசரமாக பறந்திருக்கிறது. அந்த உத்தரவில், வருகிற 10ஆம் தேதியில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை காவலர்கள் யாரும் விடுமுறை எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். 
 

கவர்னர் சந்திப்புக்குப் பிறகு அதன் பின்னணியை அறிந்ததாலும், அமைச்சரவை மாற்றம் செய்தி எதுவும் வராததாலும், ஜீனியர் அமைச்சர்கள் சிலரும், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர்களும் பதவியை தக்க வைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக உள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்