ஓரிரு தினங்கள் முன் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் காதல் செய்து கொண்டிருக்கிறேன். ஜாலியா இருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போறேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏம்ப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. ஃபோட்டோ தான் எடுத்தது. இது குத்தமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, “நான் சில தினங்கள் முன் காயத்ரி ரகுராம் வரிச்சூர் செல்வத்தை சந்தித்தது குறித்து ட்விட்டரில் போட்டிருந்தேன். அதற்கு வரிச்சூர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதைக் கூறி இது குறித்து திருச்சி சூர்யாவிடம் பேசினேன் என்றும் அதன் பிறகே அவர் அதை எடுத்தார் என்றும் சொல்கிறார். நேற்றிலிருந்து அனைத்து பத்திரிகைகளும் திருச்சி சூர்யா வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகிறது.
வரிச்சூர் செல்வம் என்னிடம் கேட்டது, ‘அரசியல் ரீதியாக உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதில் சம்பந்தம் இல்லாமல் என்னை ஏன் உள்ளே கொண்டு வருகிறீர்கள். அதிலும் என்னை ரவுடி என போட்டுள்ளீர்கள். நான் அதை எல்லாம் விட்டுவிட்டேன். அதை நீக்குங்கள்’ என சொன்னார். தனிப்பட்ட முறையில் அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் அதை நீக்கினேன். பாவம் காயத்ரி ரகுராம் என சொல்லுகிறார். அதை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என நினைத்தேன். என்னை சொல்ல வைக்கிறார்கள். அவர் தனியார் ஹோட்டலில் எதேச்சையாக சந்தித்தேன் என்கிறார். அது எதேச்சை சந்திப்பு அல்ல. திட்டமிட்டு நடந்தது தான்.
காயத்ரி ரகுராமுக்கு திருமாவளவனுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போட்டு இருந்தார்கள். ஆனால் அன்றைய இரவு காயத்ரி ரகுராம் எங்கு சென்றார் என்பது காவல்துறைக்கே தெரியவில்லை. கணேஷ் என்கிற நடிகர் தான் காயத்ரி ரகுராமை வரிச்சூர் செல்வத்திடம் அழைத்துச் சென்றதாக சொல்கிறார். எதேச்சையாக புகைப்படம் எடுத்தால் அதை ஏன் வரிச்சூர் செல்வம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். வரிச்சூர் செல்வம் என்ற ரவுடியிடம் காயத்ரி ரகுராம் புகைப்படம் எடுக்க வேண்டிய காரணம் என்ன?” என்றார்.