ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை ஒரு பக்கமும், லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை மறுபக்கமும் அச்சடிக்க வேண்டும். தெய்வங்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது நாடு செழிக்க உதவும். விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் கொண்டு வந்தால் ஒட்டு மொத்த நாடும் அதனால் ஆசிகளை பெறும். கடவுள் ஆசி இல்லை என்றால் நம் முயற்சிக்கு சில சமயங்களில் பலன் இருக்காது. இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை.
இந்தோனேசியாவில் இதை செய்துள்ளார்கள். அவர்களின் ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் உருவம் உள்ளது. நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “அரவ்'இந்து கெஜ்ரி'வால். ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா?
அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.