
தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர்'' என்றார்.

தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். பின்னர் பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''நமது வரிகளை வைத்து அனைத்து பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் இயங்கி வருகிறது. மூன்று வருடத்திற்கு பிறகு ஆளுநர் வித்ஹோல்டு (Withhold) என எழுதி அனுப்புவதில் உள்நோக்கம் இருப்பதுதான் இதிலே வெளிப்படையாக தெரிகிறது. எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். பாஜகவினுடைய சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சரியான பதில் இல்லாததால் வெளிநடப்பு செய்திருக்கிறார். இவர் வெளிநடப்பு செய்வதை பார்த்தால், தமிழ்நாட்டில் யாருமே ஆளுநர் செய்கை சரி என்று சொல்லாத நேரத்தில் இவர்கள் வெளிநடப்பு செய்வது இவர்கள் சொல்லித்தான் அவர் செயல்படுகிறார் என்று அர்த்தம் வந்துவிடும். அப்படி ஒரு நோக்கம் வந்துவிடும். இவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. முதல்வர் கொண்டு வந்திருக்கும் இந்த தனி தீர்மானம் மறு ஆய்வுக்கு உட்பட்டது. பத்து தீர்மானங்களும் ஃபுல் ஸ்டாப், கமா கூட மாறாமல் நீட் மசோதா எவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதோ, ஆன்லைன் ரம்மிக்கு எதிரான மசோதா எவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதோ அதேபோல் பத்து மசோதாக்களும் திருப்பி அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இதுதான் சட்டம்'' என்றார்.