Skip to main content

"தோல்விக்கு காரணம் கூடா நட்பு" - அதிமுக முன்னாள் எம்.பி ப. குமார் குற்றச்சாட்டு

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

former trichy mp kumar talks about bjp alliance issue

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், துவாக்குடி நகரச் செயலாளர் பாண்டியன், பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், திருவெறும்பூர் அவைத் தலைவர்கள் அண்ணாதுரை, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தாமோதரன், தலைமை கழக பேச்சாளர் ராமமூர்த்தி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்துகொண்டு ப.குமார் பேசுகையில், "தமிழகத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை யாரும் மறந்துவிட முடியாது. ஓபிஎஸ் கோமாளி போல் உள்ளார். ஓபிஎஸ், கலைஞரையும் அவரது மகன் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசி வருகின்றார். மேலும் மாநிலத்தில் ஆள்பவர்கள், மத்தியில் ஆள்பவர்கள், போலீசார், நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்டு எடப்பாடியை முடக்க நினைத்தார்கள். ஆனால் அது முடியவில்லை. ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளருக்கு முன்மொழிய கூட ஆட்கள் இல்லை. தினகரனுக்கு சின்னம் கிடைக்கவில்லை. அதனால் போட்டியிடவில்லை என கூறுகிறார். மறைமுகமாக ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ்ஸும் தினகரனும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக 43,900 வாக்குகள் வாங்கி உள்ளது. மேலும், திமுகவினர் ஈரோடு இடைத்தேர்தலில் உள்ள 238 பூத்துகளில் டோக்கன் கொடுத்து, ஒரு வாக்காளருக்கு தலா 48 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்கள். அது போல் திருவெறும்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருமா என நீங்கள் நினைக்காதீர்கள். அது வேண்டாம், நாம் ஜனநாயக ரீதியாக வெற்றி பெறுவோம். திமுக கொடுத்த 505 வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறிய ஸ்டாலின், பின்னர் 25 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறார். கலைஞர் இரண்டு ஏக்கர் நிலம் அறிவித்தார். செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் 3 சென்ட் நிலம் அறிவித்தார். அதேபோல் ஈரோடு தேர்தலில் டோக்கன் கொடுத்துள்ளார்கள். அந்த டோக்கன் வைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்கள். அதனால் வாக்காளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டிற்கும் படையெடுத்து வருவதாகவும் அங்கே இருப்பவர்கள் எனக்கு தெரிவிக்கின்றனர். 

 

தமிழ்நாடு அரசு பெண்களின் உரிமைத் தொகை என 1000 வழங்குவதாக கூறியதை வழங்கினால் நன்றாக இருக்கும். 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த கலைஞர் 49 ஆயிரம் கோடி கடன் வைத்திருந்தார். அதிமுக ஆட்சி முடிவில் 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருந்தது, அதை மீட்டு எப்படி ஆட்சி நடத்துவது என தெரியாமல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு இரண்டு ஆண்டுகளிலேயே1.65 லட்சம் கோடி கடன் வாங்கி விட்டார்கள். மீதி நாட்களில் எவ்வளவு கடன் வாங்குவார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 23 சதவீதம் வட்டி, ஓய்வூதியம் என நிதி நெருக்கடியில் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருக்கிறது.

 

திருவெறும்பூர் தொகுதியில் தோல்விக்கு காரணம் கூடா நட்பு. பிஜேபி கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததால் தான் இந்த தொகுதியில் உள்ள 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. திமுக தலைவர் தனது மகன் உதயநிதியை வைத்து மோடியை சந்தித்து தங்கள் குடும்பம் மட்டும் பயன் அடையும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியால்தான் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்னால் வெற்றி பெற முடியவில்லை. வரும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, ஸ்டாலினை இந்த தொகுதியின் எம்எல்ஏவும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெரியப்பா என அழைப்பதால் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விடுவார் என்று நம்பினேன். ஆனால், ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு கடந்த பிறகும் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை.

 

திருச்சி மாநகராட்சி ஐந்து வார்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர்கள் எதுவும் செய்யவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதேபோல் நவல்பட்டு ஆர்டிஓ அலுவலக சாலையும் உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள எந்த பள்ளிக்காவது சிறப்பு நிதி பெற்று தந்தாரா இதுவரை செய்யவில்லை. எந்த துறை அமைச்சராக இருந்தாலும் தொகுதியை பெருமைப்படுத்துங்கள் தம்பி" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்