கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வரும் 28 ஆம் தேதி தமிழக முதல்வரின் 'உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து சில விளக்கங்களை அளிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்பொழுதும் செய்தியாளர் சந்திப்பின் பொழுது காங்கிரஸ் நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருப்பது வழக்கம். அந்த வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது பன்னீர்செல்வம் என்ற காங்கிரஸ் நிர்வாகி உள்ளே வந்திருந்தார். அப்பொழுது வி.சி.முனுசாமி என்பவர் மேடையில் அமர்ந்திருந்தார். பன்னீர்செல்வம் வி.சி.முனுசாமி ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்த நிலையில் 'எப்படி நீ மேடையில் அமரலாம்' என பன்னீர்செல்வம் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருதரப்பினரும் கே.எஸ்.அழகிரி முன்பே ரகளையில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் என்ற அந்த நிர்வாகி வெளியேற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.