மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமையில் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் நடைப்பெற்றது. இதில் கரோனா கால பிரச்சனைகள், மக்கள் படும் சிரமங்கள், அரசியல் சூழல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்தருணத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஆற்றி வரும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த திட்டமிடல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. மின் கட்டணம் ரத்து
கரோனா காலத்தில் மக்களின் வருவாய் இழப்பைக் கவனத்தில் கொண்டு மின்சாரக் கட்டணத்தைத் தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2. மத்திய அரசின் நிவாரணம்
கரோனா காரணமாக 40 நாட்களைக் கடந்து மக்கள் ஊரடங்கில் தவிக்கிறார்கள். மத்திய அரசு இனியும் மெளனம் காக்காமல் நாடு முழுக்க உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
3. மாநில அரசுகளுக்கு நிதி
கரோனா நெருக்கடி காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநில அரசுகள் கேட்கும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு பாராபட்சமின்றி முழுமையாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
4. கலைக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வா?
எளியவர்கள், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராமப்புறத்தினர் பெருமளவில் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து பட்டதாரிகளாகியதால்தான் மிகப் பெரும் சமுதாயப் புரட்சி ஏற்பட்டது. இப்போது மத்திய அரசு, கலைக் கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என முடிவு செய்திருப்பது சமூக நீதியைத் தீயிட்டுக் கொளுத்தும் செயலாகும். உடனடியாக இம்முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
5. காவிரி உரிமையை மீட்போம்
காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்த்துப் போக செய்யும் நோக்கில் மத்திய அரசு அதைத் தனது ஐல்சக்தி துறையின் கீழ் கொண்டு வருவது என்பது மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.
இவ்விடயத்தில் விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் நடத்தும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்று காவிரி உரிமைகளை மீட்க களம் காண வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதுடன், மஜக இதில் முழுமையாகக் களமாடும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
6. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குச் சிறப்பு ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
மிகவும் அசாதாரணமான இந்தச் சூழ்நிலையில், கரோனா நோய் உச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில் அற்பணிப்பு உணர்வோடு, பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அனைவருக்கும் சிறப்பு ஒரு மாத ஊதியத்தைத் தமிழக அரசு வழங்க முன்வர வேண்டுமென இந்தச் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.
7. வாடகை வாகனங்களுக்கு சலுகைகள்...
ஊரடங்கு தடை காலத்தால் போதிய வருவாய் இன்றி தவிக்கும் மேக்சி கேப், கால் டாக்ஸி, ஆட்டோ, ஓட்டுநர்கள் ஆகிய வாடகை வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கான பர்மிட் மற்றும் வாகனப் புதுப்பிப்பு கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், புதுப்பிக்க கால அவகாசத்தை வழங்க அரசு முன்வர வேண்டுமெனவும் இந்தச் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது
.
8. வெளிநாடு வாழ் இந்தியர் மீட்பு.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் கரோனா காரணமாகத் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். அவர்களைத் திரும்ப அழைக்க மத்திய அரசு தாமதம் செய்வதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு, துரித நடவடிக்கைகளில் இறங்கி அவர்களைத் தாயகம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
9. பாராட்டுகள்..
கரோனா ஒழிப்பு பணியில் அர்ப்பணிப்போடு செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.