தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம், பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் இன்று (02/04/2021) தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக தலைமையிலான கூட்டணி, வலிமையான வெற்றிக் கூட்டணி. மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பாக செயல்படுகிறது. ஒரே ஆண்டில் கரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர் பிரதமர். மத்திய அரசின் நிதி மூலம் புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மத்திய அரசு அளிக்கும் நிதி மூலமே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறது. திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தடையில்லா மின்சாரத்தால் தொழில் வளம் பெருகுகிறது. தேர்தலில் வென்று அதிமுக தலைமையிலான ஆட்சி தொடரும். மக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.