கரூா் மாவட்ட ஆட்சியரைத் தகாத வார்த்தைகளில் பேசியதாக அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், தி.மு.க. எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
அதாவது, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப காலமாக அ.தி.மு.க. அரசு தி.மு.க.வினர் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகிறது என தி.மு.க. முக்கிய சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருகிறதாம்.