ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மண்ரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் அரசியல் கட்சியினர் அனுமதியின்றி தேர்தல் பணிமனைகளை அமைத்துள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குப் புகார் வந்துள்ளது. அதில் 14 தேர்தல் பணிமனைகள் உரிய அனுமதியின்றி அமைக்கப்படுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக மட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் பணிமனைகளும் உள்ளது. தற்போது தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிகளாகச் சென்று அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பணிமனைகளை அகற்றி வருகின்றனர்.