“அமரராகிவிட்ட எங்கள் தலைவி குறித்து, ஆ.ராசா அநாகரீகமாக விமர்சிக்கிறார். எடப்பாடியாரை ஒருமையில் பேசுகிறார். நாயென்று குறிப்பிடுகிறார். மத்திய அமைச்சராக இருந்தபோது, ஊழலில் திளைத்து, லட்சக்கணக்கான கோடிகளை வாரிச் சுருட்டியதற்காக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். அத்தனை குற்றமும் செய்துவிட்டு, ‘நான் குற்றவாளி அல்ல’ என்று வாதிட்டால், அவர் குற்றவாளி இல்லையென்று ஆகிவிடாது. நீதிமன்றத்தில் இன்னும் தண்டனை பெறவில்லை என்பதற்காக, அவர் யோக்கியர் ஆகிவிட முடியாது. அவர் ஊழல்வாதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே தெரியும். விரைவில் அவர் கைதாவார்.” என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டமாக விமர்சித்ததோடு மட்டுமல்லாது, “ஆ.ராசா ஒரு கையாள். அவரைத் தூண்டிவிடுவதே மு.க.ஸ்டாலின்தான். எங்கள் தலைவர்களை ஒருமையில் தரம் தாழ்ந்து அவர்கள் பேசும்போது, எங்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. பதிலுக்கு, அவர்கள் பாணியிலேயே நானும் பேசுகிறேன்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும், விருதுநகரில் நேற்று (6-ஆம் தேதி) கடுமையாக விமர்சித்தார்.
அரசியல் விமர்சனம் என்பது மெல்ல மெல்ல தனிநபர் தாக்குதலாகிவிட, விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், நேரடியாக மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுவே, உருவ பொம்மை எரிப்பு, செருப்பால் அடித்து தலைவர்கள் படங்கள் கிழிப்பு என, இம்மாவட்டம் முழுவதும், இரு தரப்பினரையும் கொதிநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில், ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மையை தி.மு.க.வினர் எரிக்க முற்பட்டபோது, காவல்துறையினர் தடுத்துவிட்டனர். அதே இடத்துக்கு அ.தி.மு.க.வினரும் கும்பலாக வர, பரபரப்பானது. இந்த களேபரத்தில், கே.டி.ராஜேந்திரபாலாஜியின் படத்தை தி.மு.க.வினர் எரித்துவிட, 160 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க.வினரும், ஸ்டாலின் உருவபொம்மையை எரிக்க முற்பட, காவல்துறை தடுத்தது. இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில் அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் ராஜேந்திரபாலாஜி உருவபொம்மையை தி.மு.க.வினர் தீயிட்டு எரித்தனர். ராஜபாளையத்தில், காவல்துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலானது. அங்கு ஸ்டாலின் படத்தைச் செருப்பால் அடித்து அ.தி.மு.க.வினரும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, செருப்புகளும் கற்களும் வீசப்பட, மோதல் முற்றியது. அதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி, இரு தரப்பினரையும் கலைத்தனர். ராஜபாளையத்தில் நடந்த மோதலில் தி.மு.க.வைச் சேர்ந்த இமாம் சாதிக் என்பவருக்கு மண்டை உடைய, அ.தி.மு.க.வினரைக் கைது செய்யக்கோரி, காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “ஊழலைப் பட்டியலிட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாமல், தரம் கெட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள். அரசியல் கோமாளியாக, முட்டாளாக ராஜேந்திரபாலாஜி இருக்கிறார். இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.வினரும் பொதுமக்களும் கொதித்தெழுந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ராஜேந்திரபாலாஜி தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், அவர் திருத்தப்படுவார். ராஜேந்திரபாலாஜி நாக்கை எப்படி அடக்குவதென்று தி.மு.க.காரர்களுக்குத் தெரியும்” என்று சீறலாகப் பேட்டியளித்துள்ளார்.