Skip to main content

“ஏமாற்றம் அளித்திருக்கிறது...” - அதிருப்தியில் பூவை ஜெகன்மூர்த்தி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
“Disappointing...” - Poovai Jaganmoorthy in displeasure
கோப்புப்படம்

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி கண்டிப்பாக தொடர்கிறது. இந்த தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைத்து தேர்தல் பணிகளையும் தொடங்குவோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தெரிவித்து அதற்கான பட்டியலை அ.தி.மு.க.விடம் கொடுத்துள்ளோம். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திருவள்ளூர் தொகுதி சொந்த தொகுதி என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதிகள் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இன்று (22.03.2024) மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கடைசியில் ஏமாற்றமே அளித்திருக்கிறது என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து 2 நாட்களில் தெரிவிக்க உள்ளோம். அ.தி.மு.க.வை கழட்டி விட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்புகின்றனர். மற்ற கட்சியினர் புரட்சி பாரதம் கட்சிக்கு சீட் தர அழைத்தார்கள். ஆனால் நாங்கள் தான் போகவில்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்