புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்புக்குரியது. உச்சநீதிமன்றத்திற்கு இருக்கின்ற புரிதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
கடந்த 49 நாட்களாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடியதற்கு உச்சநீதிமன்றம் இன்றைய தினம் அளித்துள்ள தீர்ப்பு, விவசாயிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க முடியும். உச்சநீதிமன்றம் அமைத்து இருக்கின்ற குழு விவசாயிகளிடம் முழுமையாக விசாரணை செய்து விவசாயிகளுக்கு ஆதரவான முடிவை எடுக்கும் என்று நம்புவோம்.
ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன் அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் சர்வாதிகாரப் போக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவது நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு மக்கள் மீதுள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டியிருக்கிறது.
விவசாயிகளின் குரலை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் உணர்வைப் புரிந்து உத்தரவிட்டிருப்பதை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு மனதோடு வரவேற்கிறது'' எனக் கூறியுள்ளார்.