அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக கடந்த 22 ஆம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அன்று முற்பகலில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் டெல்லி துணை முதல்வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு இருந்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியாவை மார்ச் 4ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சத்தியேந்திர ஜெயினும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.