கடலூர் பாராளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த ரமேஷ். இவரின் வீடு பண்ருட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் இன்று சுகாதாரத்துறை குழுவினர், அந்த வீடு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என அடையாளப்படுத்தி அதற்கான போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதன் மூலம் அந்த குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.
ஏன் திமுக எம்பி வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என விசாரித்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டி அருகில் உள்ள கொக்காம்பாளையத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அவரது தாயார் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்க பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். கரோனா பாதிப்பு காரணமாக அவரை வெளியில் அழைத்துச் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே தனது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒரு சிபாரிசு கடிதம் அளித்தால், அதை காட்டி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுவேன் என எம்பி ரமேஷிடம் நேரில் வந்து அந்த இளைஞர் கேட்டுள்ளார்.
அவரது தாயாரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் எம்பி ரமேஷ், அந்த இளைஞரை வீட்டில் உட்கார வைத்து அவருக்கு சிபாரிசு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த கடிதத்துடன் தனது தாயாரை அழைத்துச்சென்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார் அந்த இளைஞர். அங்கு அவரது தாயாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்தப் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞரும் அவரது மனைவியையும் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. உடனே இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை அழைத்துவந்து கடலூர் மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்டவர்களையும் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் சிபாரிசு கடிதம் கொடுத்த திமுக எம்பி ரமேஷ் அவர்களுக்கும் அந்த இளைஞர் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு நோய்த்தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என்கிறார்கள் மருத்துவ குழுவினர்கள்.