ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தை எடப்பாடி அரசு நீட்டித்துள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட சில வகை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இப்போது வரை ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.
அந்த வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இயங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. கல்வி நிறுவனங்களைத் திறப்பது இப்போது இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இந்தச் சூழலில், அரசின் உத்தரவை அரசு நிறுவனங்களே மதிக்காத நிலையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ’’சென்னை கடற்கரை சாலையிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆசிரியர்கள் தினமும் வந்து போக வேண்டும் எனக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் இந்நிறுவனத்தின் பிரின்சிபால் உஷாராணி. ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் தொடர்ச்சியாகப் பெறப்படுகிறது. பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு செம டோஸ் விழுவதுடன், சி.எல்., எம்.எல்., இ.எல். என்கிற விடுமுறையில் அவர்கள் இருப்பதாகப் பதிவு செய்கிறது இப்பயிற்சி நிறுவனம்.
பொது முடக்கத்தால் எந்தக் கல்வி நிறுவனமும் இயங்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டளையிட்டுள்ள நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் தன்னிச்சையாக நிறுவனத்தைத் திறந்து வைத்து ஆசிரியர்கள் வர வேண்டுமென கட்டாயப்படுத்துவதும், வராதவர்களை விடுமுறையில் இருப்பதாகப் பதிவு செய்வதும் வேதனை தருகிறது. மேலும், கரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களில் (கண்டைன்மெண்ட் ஸோன் ) இருக்கும் பகுதிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களையும் கட்டாயமாக வரவழைக்கிறது இப்பயிற்சி நிறுவனம்.
இது குறித்து தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் உத்தரவுகள் கூட ஊருக்கு உபதேசமாகத்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் இந்தப் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.