கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு நாளை (10.05.2023) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
காங்கிரஸ் - பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது. அதோடு அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் கர்நாடகத் தேர்தல் ஒரு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
கடந்த 6 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகா மாநிலம் சித்தப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மணிகாந்த் ரத்தோட் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை அழித்து விடுவேன் என மணிகாந்த் ரத்தோட் பேசுவது போல் அந்த ஆடியோவில் இருந்தது. இந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ், மணிகாந்த் ரத்தோட் மீது 40 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என அவர் மீது மீதுள்ள வழக்குகளையும் பட்டியலிட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் இப்போது சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். சித்தாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் பதிவில் இருந்து இது தெளிவாகிறது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (08.05.2023) தனது சொந்த ஊரான கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டிருந்த போது பேசுகையில், "என்னையும், எனது குடும்பத்தினரை கொலை செய்வதாக பாஜக வேட்பாளர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சானது பாஜக தலைவர்களின் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு யாருக்கு கார்கே குடும்பத்தை அழிக்க இத்தகைய தைரியம் வரும். அவரின் இந்த மிரட்டலுக்கு பின்னணியில் சில பாஜக தலைவர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற மிரட்டல் வந்திருக்காது.
என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுர்கி மக்களும் கர்நாடக மக்களும் உள்ளனர். நான் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள். என்னையும் எனது குடும்பத்தினரையும் அழித்தால் எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். நானும் எனது மகனும் பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பேசுவதால் எங்களை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். பிரதமர் மோடியும் அதே போல் தான் நடந்து கொள்கிறார். பிரதமர் மோடி, என்னை பற்றி நீங்கள் பேசுங்கள். அது சரி. ஆனால், எனது மகனை பற்றி பேசுவது ஏன். எனது மகன் உங்களுக்கு சமமானவர் இல்லை. நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள். நான் சிறு வயதாக இருந்தபோது ஒட்டுமொத்தமாக எனது குடும்பத்தினரை இழந்து தனியாக நின்றேன்.
நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் நாங்கள் தொடர்ந்து வாழ்வோம். பாஜகவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும். நானும் வலுவாக தான் உள்ளேன். எனக்கு தற்போது 81 வயது ஆகிறது. நான் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பு என்னை நீங்கள் கொலை செய்ய விரும்பினால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. உங்களின் பிரச்சனை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள். நான் அதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் எனது உயிர் மூச்சு உள்ளவரை ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று பேசினார்.