திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிகட்சியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சச்சிதானந்தமும், தி.மு.க. வேட்பாளராக தங்கத்தமிழ்ச்செல்வனும் போட்டிபோடுகிறார்கள். அவர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தேனி லட்சுமிபுரம் அருகே போடப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மாலை 6.50க்கு வந்தார். அப்போது அங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து கூட்டத்திற்கு முன்னிலை வகித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியோ கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் செய்த சாதனைத் திட்டங்களையும் எடுத்துக்கூறி கூடியிருந்த மக்களிடம் தி.மு.க. வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்திற்கும் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இது தேர்தல் பரப்புரை கூட்டமா அல்லது வெற்றிவிழா மாநாடா? என்று அனைவரும் வியக்கும் அளவிற்கு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், சக்கரபாணி அவர்களுக்கும் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.
ஐ.பெரியசாமி உழைப்பே தேனி, திண்டுக்கல் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இந்திய கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் இந்த இரண்டு வேட்பாளர்களையும் (தேனி-தங்கத்தமிழ்ச்செல்வன், திண்டுக்கல்-சச்சிதானந்தம்) பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்திய கூட்டணிக்கு மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். கடந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38தொகுதிகளில் நாம் வென்றோம். ஆனால் ஒரு தொகுதியில் மட்டும் வெல்லவில்லை. அதுதான் இந்த தேனி தொகுதி. அப்படிப்பட்ட இத்தொகுதியில் இந்த முறை நாம் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும்” என்று கூறினார்.