கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.கே.வேதரத்தினம் என்பவரும், அதிமுக சார்பில் ஓ.எஸ்.மணியன் என்பவரும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில், அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றிருந்தார்.
இதையடுத்து, ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து எஸ்.கே.வேதரத்தினம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓ.எஸ்.மணியன் சட்டவிரோதமாக ரூ.60 கோடி பட்டுவாடா செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இருவேறு சமூகத்தின் இடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன்களை மக்களிடையே விநியோகித்திருக்கிறார்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (20-11-23) உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.