மக்கள் திட்டங்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது முறையல்ல என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''போக்குவரத்து துறையை பொறுத்த அளவிற்கு முதன்மைச் செயலாளர், அமைச்சர்களை அழைத்து வைத்து உடனடியாக முதல்வர் பேசியிருக்க வேண்டும். அரசு பேருந்துகளில் மதுரையிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு எவ்வளவு வாங்குகிறோம். அதே பயணத்திற்கு தனியார் பேருந்துகளில் எவ்வளவு வாங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி கட்டுபடியாகிறது. அரசு சொகுசு பேருந்துகளை நடத்துகிறது, குளிர்சாதன பேருந்துகளை நடத்துகிறது. இதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறோம் என்று கேட்க வேண்டும். ஆனால் இதுவரை முதல்வர் அது மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை. எல்லா இடத்திலும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இது விளம்பர ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இது தெரியவில்லை. எல்லா அமைச்சர்களுக்கும் வாய் கொழுப்பு அதிகமாயிருச்சு. பாண்டியராஜன் நடித்த ஒரு படம் இருக்கிறது 'வாய்க்கொழுப்பு' என்று, எதிலும் வாய் துடுக்காகப் பேசிவிட்டு போகிறார்கள். அதுபோன்று நிறைய அமைச்சர்கள் இப்பொழுது வாய் கொழுப்பாக ஏதாவது பேசி இன்னைக்கு மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரையும் கெடுத்துக் கொண்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. சமீப காலமாக உங்களுக்கெல்லாம் தெரியும் கட்டணம் இல்லாத பேருந்தில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். நாங்கள் கட்டணத்தை கொடுக்கிறோம் எங்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் என்று பாட்டி முதல் மாணவிகள் வரை கேட்பதற்கு ஆரம்பித்து விட்டார்கள். இதனால்தான் ஜெயலலிதா அவருடைய ஆட்சியில் எதையும் இலவசம் என்று சொல்லவில்லை. விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், விலையில்லா சைக்கிள், விலை இல்லா பரிசு பெட்டகம் என்று சொன்னார்கள். அதை இலவசம் என்று சொன்னால் மக்களை கொச்சைப்படுத்துவதாக அமைகிறது. அமைச்சர்களாக இருந்தாலும் எல்லோரும் மக்களுடைய பணத்தில் தான் அனுபவிக்கிறோம். விமான டிக்கெட் ஓசி, கார் ஓசி, காரில் இருக்கின்ற ஏசி ஓசி, டிரைவர் ஓசி, டீசல், பங்களா ஓசி, எல்லாமே ஓசி இப்படி ஓசி ஓசியாக அனுபவித்துவிட்டுஇன்று மக்களுக்கான இலவச திட்டங்களை கொச்சைப்படுத்துவது முறையல்ல'' என்றார்.