முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வந்த செல்போன் அழைப்பில் மிரட்டியது தொடர்பாக தென்காசி மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கட்சிக்குள் ஏற்பட்ட இரட்டை பிளவால் இரு அணிகளாக இருந்து வருகிறார்கள். அதில் ஆர்.பி. உதயகுமார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார். இவர் அவ்வப்போது ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது அணியை சார்ந்தவர்களையும் கடுமையாக தாக்கி பேசி வருவது வழக்கம். ஓரிரு தினங்கள் முன் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் பேசிய ஒருவர் தான் சங்கரன்கோவிலில் இருந்து பேசுவதாகவும் நீங்கள் அளித்த பேட்டி நன்றாக இருந்தது என்றும் ஓ.பி.எஸ் கட்சியில் இணைந்தால் தற்கொலையே பண்ணிப்பேன் என்று சொன்ன பேட்டியும் நன்றாக இருந்தது என்றும் கூறுகிறார். மேலும் பேசிய அவர் எப்போது வருவீர்கள் என்றும் நீங்கள் வரும் பொழுது பாடைகட்டி மாலையோடு தயாராக இருக்கின்றோம் என கூறி தன் செல்போனை துண்டிக்கிறார்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவண பாண்டியன் என்பவரை காணவில்லை என்றும், அவரை போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகழேந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''அதிமுகவைச் சார்ந்த தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவண பாண்டியன் விசாரணை என்கின்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் தரம் தாழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இன்றைய தினம் அவர் அளித்த பேட்டியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வாழ்க்கையை முடித்து விடுவதாக பேசியிருக்கிறார். முன்னதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் வீட்டை சூறையாடுவதாக பேசி இருக்கிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.
சரவண பாண்டியன் பேசியதாக விசாரணை என்கின்ற பெயரில் அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். யார் அழைத்து சென்றார்கள் என்பது தெரியவில்லை காவல்துறையினரா அல்லது கடத்தி செல்லப்பட்டாரா என்பது புரியவில்லை. உடனடியாக காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும். அவர் குடும்பத்தாரும் நண்பர்களும் கழகத்தினரும் அவர் எங்கே இருக்கிறார் என்று புரியாமல் தேடி வருகிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவணபாண்டியனை கலகத்தை ஏற்படுத்துதல் (153), அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தல் (505), ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அய்யாபுரம் காவல்நிலையத்தினர் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.