நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.