Skip to main content

“நெருப்புடன் விளையாட வேண்டாம்!” - ஆ.ராசாவுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

BJP MLA Vanathi Srinivasan condemn to DMK MP A Raja

 

ஜூன் மாதம் 3ம் தேதி நாமக்கலில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா "எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்றும் பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்.

 

நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார். ‘ஜனநாயகம் பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்.

 

பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள், அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னமும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால், பாஜக அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன், உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன், அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று பேசினார்.

இதற்கு பாஜகவினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “ஜூன் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, "பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும், இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசித் தீர்வு' என்ற பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் அண்ணா வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள் என பேசியுள்ளார்.


அப்பட்டமான பிரிவினைவாத, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு இது. மத்திய அமைச்சராக இருந்து ஆ.ராசா எதையும் தெரியாமல் பேசக் கூடியவர் அல்ல. திமுக எப்போதுமே, இந்தியா என்ற நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகவே பேசி வருகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார். வ.வே.சு. ஐயர் என பெரும் இளைஞர் பட்டாளம் எழுச்சி கொண்டு போராடியது. அவர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும் ஆங்கிலேயே அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.


இந்த நேரத்தில் இந்த சுதந்திரத் தீயை அணைக்க, ஆங்கிலேயர்கள் தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அதன் விளைவாக தோன்றியதே நீதிக் கட்சி. அந்த நீதிக் கட்சிதான் பின்னாளில் திராவிடர் கழகமாகி, திராவிட முன்னேற்றக் கழகமானது. சுதந்திர வேட்கையை தணிக்க, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் பிறந்த திமுகவினர், பிரிவினைவாதம் பேசுவதில் ஆச்சரியம் இல்லை.


இந்தியாவில் பிரிவினைவாதம் பேசினால், தனி தமிழ்நாடு கேட்டால் என்ன நடக்கும் என்பது, திமுகவினருக்கு நன்றாகத் தெரியும். பிரிவினையை ஒருபோதும் மத்திய அரசும், இந்திய மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தனி தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்ற ஒன்று என்பதை திமுகவினர் அறிவார்கள். அதனால்தான், தனி தமிழ்நாடு கோரிக்கையை திமுக நிறுவனர் அண்ணாதுரை கைவிட்டார்.


தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம். அதற்காகவே, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று அழைக்கத தொடங்கினார்கள். அதன்வழியிலேயே, நாமக்கல்லில் ஆ.ராசா, தனி தமிழ்நாடு என பிரிவினைவாதம் பேசியிருக்கிறார்.

 

மாநில சுயாட்சி பற்றி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஆ.ராசா பேசியிருக்கிறார். அரசியல் சட்டப்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை திமுக வழங்கியிருக்கிறதா என்றால் இல்லை. திமுக ஆட்சியில் அதிகாரங்கள் அனைத்தும் ஒரே குடும்பத்திடம் குவிக்கப்பட்டுள்ளது. யாரின் கட்டளைப்படி, அமைச்சர்கள், மேயர்கள் முடிவெடுக்கிறார்கள் என்பது நாடறிந்த ரகசியம். மேயருக்கான அங்கியுடன், மேயர் ஒருவர், முதல்வரின் மகன் உதயநிதி காலில் விழுந்து வணங்கியதே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று.

 

ஒரே குடும்பம் திமுகவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காகவும், குடும்ப ஆதிக்கத்தின் அவலத்தையும், திமுக ஆட்சியின் சீர்கேடுகளில் இருந்து திசை திருப்பவும், பிரிவினைவாதத்தை திமுக கையிலெடுத்துள்ளது. இந்தியாவின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் என்பது திமுக அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை திமுகவுக்கு வாக்களிப்பவர்களே ஏற்க மாட்டார்கள். தமிழகம் என்றுமே தேசியத்தின் பக்கம்தான். எனவே, நெருப்புடன் விளையாட வேண்டாம். அதனை விளைவுகள் மோசமாக இருக்கும். ஆ.ராசாவின் பேச்சை, இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகியுள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்