இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 8ம் ஆண்டு துவக்க விழாவை அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் ஒரு தனியார் ஓட்டலில் மோடி பதவியேற்ற 8ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை - முன்னேற்றம் என்று இருக்கிறது. இது ஏழைகளுக்கான ஆட்சியாக உள்ளது.
இந்தியாவில் வீடில்லாத ஏழைகளுக்கு இதுவரை 52 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இனி கட்டப்படும் 16 லட்சம் வீடுகள் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகின்றன. 17 கோடியே 96 லட்சம் ஆயுஸ்மான் பவன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை ஆகியவற்றின் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது, கிசான் கிரெடிட் கார்டு 30 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கரோனா 3வது, 4வது, 5வது அலை ஏற்படாததற்கு காரணம் மோடி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான்.
முத்தலாக் தடை செய்ததன் மூலம் 82 சதவீதம் முத்தலாக் விவாகரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. 4 கோடி போலி எல்.பி.ஜி கேஸ் இணைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.15 ஆயிரம் கோடி அளவில் காதியில் மட்டும் விற்பனை செய்து சாதனை படித்திருக்கிறோம். இந்தியாவில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூபே கார்டு மூலம் 70 கோடி பேர் இணைந்து உள்ளார்கள். 2014க்கு பின் தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
22,500 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை எட்டு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது. மரபுசாரா எரிசக்தித் துறை, 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. வெயில் மற்றும் காற்றின் சக்தியை பெறுவதில் உலகளவில் இந்தியா, 4வது இடத்தை பெற்றுள்ளது. இன்று முதல் வரும் ஜூன், 15ம் தேதி தேதி வரை பாஜக விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் திமுக கபட நாடகம் போடுகிறது. எல்லா காலத்திலும் பாஜக மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது. பாரதி ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மேகதாது வேண்டும் என கர்நாடக சிவகுமார் ஊர்வலம் செல்கிறார், கேரளாவில் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு குறித்து திமுக ஸ்டாலின் பேசவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
மக்களின் அன்பைப் பெற்று நம்பர் ஒன் ஆக வருவதற்காக கடினமாக உழைப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தமிழகத்தில் நன்கு ஆட்சி செய்ய பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்து இருந்தோம், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை டேட்டா வைத்து கூறுகிறோம். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது என்று கமிஷனருக்கு தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது, தினசரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி ஆட்சியின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.