
சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ திவகாரன் பயன்படுத்தக்கூடாது என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், தனது புகைப்படத்தையோ, பெயரையோ மீறி பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடன்பிறந்த சகோதரி சசிகலா என்று ஊடகங்களில் பேசுவதை திவாகரன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உண்மைக்கு மாறாக தொடர்ந்து ஊடகங்களில் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும், நோட்டீசை பெற்றுக்கொண்ட பின்னரும் மீறி நடந்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் உச்சமாக திவாகரன் ‘‘ அம்மா அணி’’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், எதிரணியான இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு ஆதரவாக கருத்துக்களை திவாகரன் தெரிவித்து வருவதால் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திவாகரனுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.