தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டு, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மஞ்சகுப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்றது. அங்கு ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் ரூம் சாவி மாயமானதால் பூட்டைத் திறக்க இயலவில்லை. இதனால் 19-ஆம் தேதி காலை 35 நிமிடங்கள் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 34 வார்டுகளை தி.மு.க கூட்டணியும், 6 வார்டுகளை அ.தி.மு.கவும், பா.ம.க, பா.ஜ.க தலா 1 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றின.
இந்த நிலையில், கடலூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதால்தான் அ.தி.மு.க தோல்வியடைந்தது என குற்றம் சாட்டிய அ.தி.மு.கவினர் கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் திருப்பாப்புலியூர் சிக்னல் அருகே திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடலூர் மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூடுதல் எஸ்.பி. அசோக்குமார், டி.எஸ்.பி கரிகால்பாரி சங்கர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து 30 நிமிடங்களுக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தின் போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் எம்.சி.சம்பத் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘கடலூரில் ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை இரவு நேரத்தில் சில அதிகாரிகள் திறந்து ஓட்டுப் பெட்டிகளை மாற்றிவிட்டனர். இந்த சம்பவத்தினால் தான் அறையின் சாவி தொலைந்துவிட்டது. இதனால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கடலூர் மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவித்து மறுதேர்தல் நடத்த வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.