பொங்கலுக்கு முன்பாக சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. ஆளுநர் உரையுடன் கூடும் கூட்டத்தை நடத்திவிட்டு, பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார் ஓபிஎஸ்! இந்த நிலையில், சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, ஒவ்வொரு வருடமும் ஆளுநர் உரையுடன் கூடும் முதல் கூட்டத்தில் ஆட்சியாளர்கள் எழுதி தரும் உரையை ஆளுநர் வாசிப்பதுதான் சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அந்த உரைகள், ஆளும் கட்சியின் நிர்வாகத்திறனையும் திட்டங்களையும் கவர்னர் புகழ்ந்து பேசும் தொகுப்பாகவே இருக்கும்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டம் என்பதாலும், எடப்பாடியோடு ஆளுநர் பன்வாரிலால் முரண்பட்டு வருவதாலும் எடப்பாடி ஆட்சியை புகழ்ந்து பேசும் உரையை ஆளுநர் வாசிப்பாரா ? அல்லது தவிர்ப்பாரா? என்கிற விவாதம் அதிகாரிகளிடையே எதிரொலிக்கச் செய்திருக்கிறது. மேலும், கரோனாவை காரணம் காட்டி கடந்த கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கத்தில் நடத்தினார் எடப்பாடி. இந்த முறையும் கலைவானார் அரங்கமா? அல்லது கோட்டையிலுள்ள சட்டமன்றத்திலா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!