இந்தியாவில் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ராகுல் காந்தி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். குமரியில் துவங்கி காஷ்மீரில் முடியும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காந்தி நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் தேசிய கொடி வழங்கி நடைப்பயணத்தை துவக்கி வைக்க, முதற்கட்டமாக காந்தி மண்டபத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் பகுதிக்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரிக்கு போராட்டம் நடத்தச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற பொழுது நள்ளிரவில் திண்டுக்கல்லில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.