அண்ணாமலை ‘நான் தலைவன்’ என சொல்வது நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘நானும் ரவுடி’ என சொல்வது போல் உள்ளதாக எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதற்கு கூட்டணி தர்மத்தை மீறி பாஜகவினரை அதிமுக தங்களது கட்சியில் இணைத்துக் கொள்வதாக பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு ஒரு படி மேலே சென்ற அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக எதிர்வினை இருக்கும் என அதிமுகவை எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார். மேலும், நான் தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் நானும் இருப்பேன். என்றும் பேசி இருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. மாணிக்கம் தாகூர், “தலைவர் என்பவர் அவரது சடமன்ற தொகுதியில் முதலில் வெற்றி பெற வேண்டும். தன்னைத் தானே எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா என சொல்லிக்கொண்டு அண்ணாமலை நகைச்சுவையாக ஆகிவிடக்கூடாது. அரவக்குறிச்சி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியுற்றவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அரவக்குறிச்சி மக்கள் அவரை நிராகரித்தவர்கள்.
அவரைப் பொறுத்தவரை நான் தலைவன் நான் தலைவன் என சொல்வது நகைச்சுவை நடிகர் வடிவேலு நானும் ரவுடி தான் என சொல்வது போல் உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலிலோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது பஞ்சாயத்து தேர்தலிலோ அண்ணாமலை வெற்றி பெற்று நான் ஒரு பஞ்சாயத்து தலைவன் என்று சொல்லட்டும் அது நியாயமாக இருக்கும்” எனக் கூறினார்.