Skip to main content

“இதை நான் இன்னைக்கு சொல்றேன்; நடக்கத்தான் போகுது” - அண்ணாமலை

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

Annamalai on Online Gambling Bill

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்கால மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஆறு மாத கால இடைவேளையில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கூடுதலாக விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும் படி ஆளுநர் மாளிகை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு தடை மசோதாவை அனுப்பியதில் இருந்து, தற்போது கூடுதல் விளக்கம் கேட்டு ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பிய இடைப்பட்ட 4 மாதம் 11 நாட்களில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆன்லைன் ரம்மியால் தற்போது வரை 44 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். 

 

தமிழக பாஜக சார்பில் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் கோவையில் சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். சட்டப் பேரவையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வராமல் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினால் ஆளுநருக்கு வேறு வழி இல்லை. கையெழுத்து போட்டுத்தான் ஆக வேண்டும். ஆளுநர் இரண்டாவது முறை கையெழுத்து போடமாட்டேன் எனச் சொல்ல முடியாது. 

 

ஆனால், நான் இதை இன்றைக்கு சொல்கிறேன். இதே சட்டத்தை ஆளுநர் கையெழுத்து போட்டால் அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கத்தான் போகிறது. ஏனென்றால் அதில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும். யாரையோ சமாதானப்படுத்துவதற்காக மறுபடியும் கையெழுத்து போடுங்கள் என நிற்கக் கூடாது. எம்.எல்.ஏக்கள் மறுமடியும் ஆராய்ந்து அதில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பியதை மக்களுக்கு காட்டுங்கள். ஆளுநர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்க்கலாம். காரணங்களாக என்ன சொல்லி உள்ளார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்